தே.மு.தி.க., எம்.எல்.ஏக்கள் இருவர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

   தே.மு.தி.க., எம்.எல்.ஏக்கள் இருவர் இன்று காலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ., ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ., தமிழ் அழகனும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் : தங்களது தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்ததாக தெரிவித்தனர். தங்களது தொகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்ததாகவும் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் நழுவல் : தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜனும், தமிழ் அழகனும் முதலமைச்சருடனான இந்த சந்திப்பின் பின்னணியில் அ.தி.மு.க.,வில் இணைவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கருத்து தெரிவிக்க மறுத்தனர்.
அதே வேளையில், தே.மு.தி.க., கட்சித் தலைவர், தமிழக அரசு செயல்பாடுகள் மீது வைக்கும் தொடர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தமிழக அரசு செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர். தங்களது கட்சித் தலைவர் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து பேசியிருப்பதால் அவர்கள் இருவரும் விரைவில் அ.தி.மு.க.,வில் இணைய வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் : ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 151 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர்கள் இருவரும் அடங்குவர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்களும் திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்களும் இருக்கின்றனர்.
இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 10 எம்.எல்.ஏ.க்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 8 எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,காங்கிரஸ் கட்சிக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ம.கவுக்கு 3 எம்.எல்.ஏ.க்களும் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிக்கு தலா 2 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 10 சதவீதத்திற்கு மேல் அதாவது 24 உறுப்பினர்களை பெற்றிருக்கும் கட்சி மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். எனவே 29 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தேமுதிக.வில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் விலகினால் மட்டுமே அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கநேரிடும்.
                                                                            -இணைய செய்தியாளர் - s.குருஜி