தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் மேலும் இருவர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

     சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பேராவூரணி தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் பாண்டின் மற்றும் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று காலையில் சந்தித்துப் பேசினர்.
நேற்று தே.மு.தி.க.,இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று மேலும் இருவர் சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண்பாண்டியன், டமக்கேல் ராயப்பன் : தங்கள் தொகுதி பிரச்னைகளை குறித்து தெரிவிப்பதற்காக முதலமைச்சரை சந்தித்ததாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்திடம் முன் அனுமதி பெற்றீர்களா என்ற கேள்விக்கு, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு யாரிடமும் அனுமதி பெற அவசியம் இல்லை என மைக்கேல் ராயப்பன் தெரிவித்தார்.
இதனால் சட்டப்பேரவையில் 29 எம்.எல்.ஏ.,க்களுடன் பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது தே.மு.தி.க. இந்நிலையில் தொடர்ந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசி வருவதும், முதலமைச்சர் ஜெயலிதாவை சந்தித்து வருவதும் தே.மு.தி.க., தனது எதிர்கட்சி அந்தாஸ்தை இழந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
விஜயகாந்த் கொந்தளிப்பு : தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று, மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ., தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டினர்.இதனையடுத்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜனும், தமிழ் அழகனும் அ.தி.மு.க., வில் விரைவில் இணையக்கூடும் என்று அரசியல் வடாரத்தில் சலசலக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் விஜயகாந்த்.
அப்போது விஜயகாந்திடம் செய்தியாளர்கள் சிலர் : முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் செய்தியாளர்களை சரமாரியாக திட்டினார். கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். கடைசி வரை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமலேயே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.