இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம் : துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்கிறார்

     தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் ஒரு வாரம் நடைபெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், அந்த பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்வாகிறார்.
இதனையடுத்து துணை சபாநாயகராக பதவி அவர் ஏற்றுக்கொள்வார். இதனைத் தொடர்ந்து அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், முதல் துணை நிலை மதிப்பீடுகளை தாக்கல் செய்கிறார்.
இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, சட்டமன்றக் கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என்பதை முடிவு செய்யும். தமிழக சட்டமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து, அடுத்த மாதம் 30 ஆம் தேதி வைரவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு சென்னை கோட்டை எதிரே காமராஜர் சாலையில் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
இதனிடையே முதலமைச்சரை சந்தித்துப் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுந்தரராஜன், தமிழழகன் ஆகியோர் ஒரே வரிசையில் அமரும் வகையில்,  சட்டமன்றத்தில் இருக்கை வசதி செய்யப்படும் என சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.