மத்திய அமைச்சரவை மாற்றத்தால் பலனில்லை எதிர்க்கட்சிகள் கருத்து

   த்திய அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் எந்த பலனையும் தரப்போவதில்லை என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஐ.நா. சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் என்ற பெருமையுடன் இந்திய அரசியலுக்கு வந்த சசி தரூர், ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர். ஆனால், பல்வேறு பிரச்னைகளில் அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால், சசி தரூரிடம் இருந்து அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இந்நிலையில், மனித வள மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் என்ற முக்கிய பொறுப்பு தற்போது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், 2014 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியை சமாளிக்கும் வகையிலும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்ததற்கு பலனாகவும் நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் இவரது பிரச்சாரம் பெரிதும் கை கொடுக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.
இந்த மத்திய அமைச்சரவை மாற்றம் ஒரு வீண் முயற்சி என்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் நாட்டில் ஊழல்கள் குறைந்துவிடாது என்று சமூக ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும், முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால், அவ்வாறு எதுவும் செய்யப்படாதது அவரது ஆதரவாளர்களுக்கு குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.