மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு

  மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புணி ராமதாஸ் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போதுமான கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இல்லாத நிலையில் கல்லூரி இயங்க அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் அனுமதி அளித்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும். இதன் மூலம் அவர், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று கூறி சி.பி.ஐ. அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் அப்போதைய சுகாதாரத்துறை துணைச் செயலர் கே.வி.எஸ். ராவ், அமைச்சகப் பிரிவு அதிகாரி சுதர்சன் குமார், இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியின் தலைவர் சுரேஷ் பதோரியா உள்ளிட்ட மேலும் 9 பேர் மீதும் சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தல்வந்த் சிங் உத்தரவிட்டதை அடுத்து, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் பெற்றுள்ளனர். நீதிபதி தல்வந்த் சிங் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்.
  -இணைய செய்தியாளர் - s.குருஜி