2ஜி குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: தி.மு.க., விருப்பம்

              2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக முன்னாள் தணிக்கைத் துறை அதிகாரியின் குற்றச்சாட்டு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கான தீர்மானத்தை தி.மு.க., கொண்டு வரும் எனக் கூறப்படுகிறது.
தணிக்கைத் துறை தலைவர் அலுவலகத்தில், தொலைத்தொடர்பு துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஆர்.பி.சிங் நேற்று அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தான் கூறவில்லை என்றும், கூடுதலாக ஸ்பெக்ட்ரம் வைத்திருந்த நிறுவனங்களிடம் இருந்து 37 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் என்றும் ஆர்.பி. சிங் தெரிவித்திருந்தார். மேலும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவரான முரளி மனோகர் ஜோஷி, தணிக்கைத் துறை அறிக்கையை திருத்துமாறு தொலைபேசியில் அழைத்து வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள முரளி மனோகர் ஜோஷி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்று கூறினார். அதேநேரத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான தணிக்கை துறை அறிக்கையின் குற்றச்சாட்டில் பாரதிய ஜனதாவுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகி இருப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆர்.பி.சிங்கின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது. இந்த கூட்டத் தொடரிலேயே ஆர்.பி.சிங்கின் குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் தி.மு.க. தீர்மானம் கொண்டு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
-பசுமை நாயகன்