4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்த வழக்கு

           2001ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்,  ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக முன்னாள்  எம்பி செ.குப்புசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஹெச்.எல். தத்து, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு அரசியல் கட்சியின் தலைவரான ஜெயலலிதாவால் எப்படி இவ்வாறு  நடந்து கொள்ள முடிந்தது என ? அவரது வழக்கறிஞரான லலித்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவரால், அதற்கு தகுந்தவாறு நடந்து கொள்ள முடியாதது ஏன்? என்றும் நீதிபதிகள் வினவினர். ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்தபோது, அவர் மீது,  சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்கள். மாறாக அந்த தேர்தல் அதிகாரி, ஜெயலலிதா சொல்படி நடந்துகொண்டாரா என்றும் நீதிபதிகள் வினவினார்கள்.
இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரியல்ல எனவும், மாறாக இந்த பிரச்னையை மறு ஆய்வு செய்யுமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.