மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் கருத்தால் சர்ச்சை

       சி.ஏ.ஜி எனப்படும் மத்திய தணிக்கை அமைப்பு அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகள் அனைத்தும் மத்திய தணிக்கை அமைப்பிற்கு ஆதராவாக களம் இறங்கியுள்ளன.
மத்திய தணிக்கை அமைப்பை பல நபர் கொண்டதாக மாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார். மேலும், அரசியல் சாசன அந்தஸ்து பெற்ற அமைப்புகள் தங்களது வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
சி.ஏ.ஜி. அறிக்கைகள் மக்களவை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை கசியவிடுவதற்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  அவரது இந்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஊழல்களை வெளிப்படுத்தியதால் சிஏஜி.,யின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு
சி.ஏ.ஜி. அமைப்பை பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி பிரச்னைகளை, விமர்சனங்களை சந்திக்கிறறோ அப்போதெல்லாம் இந்த அமைப்பை பலவீனமாக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால்
அரசு தான் சி.ஏ.ஜி.,யை தேர்வு செய்து நியமனம் செய்கிறது. அந்த அமைப்பு மீது அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை. சில மாநிலங்களில் ஆளுங்கட்சியும் சில மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியும் நடைபெற்று வருகின்றன. எனவே, சி.ஏ.ஜி.,யை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு இருக்கக் கூடாது. ஆனால், இருதரப்பினருமே சி.ஏ.ஜி.,யை பலவீனப்படுத்தவே முயற்சி செய்கின்றனர் என தெரிவித்தார்.
அதுல் அன்ஜன், இந்திய கம்யூனிஸ்ட்
சி.ஏ.ஜி.,யின் உரிமைகளை நசுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டால், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியும் அதை எதிர்த்து போராடுவோம். இதற்கான முயற்சிகள் அனைத்தையும் தோல்வி அடையச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சி.ஏ.ஜி.,யை பலவீனப்படுத்துவதாக தாம் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும், தமது கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆனால், நாராயணசாமி கூறியவற்றையே தாங்கள் வெளியிட்டதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் பிடிஐ., செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
-பசுமை நாயகன்