மீரா குமார் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

         நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவது குரித்து ஆலோசி்க்கப்பட உள்ளது.
இதனிடையே, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தும் தீர்மானத்தை பாரதிய ஜனதா கூட்டணி கொண்டு வரும் என தெரிகிறது. பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி, எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது.
இதுபோல், மக்களவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கும் ஆதரவு தரவேண்டும் என பாரதிய ஜனதா கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கு மத்திய அரசின் முடிவை திரும்பப்பெறக்கோரி வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தும் தீர்மானத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி  கொண்டு வரும். அரசின் முடிவுக்கு எதிராக தே.ஜ கூட்டணி நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
திமுக நிலை என்ன?நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தங்களை யாரும் அணுகவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்நிலையில், சிறு வியாபாரிகளின் நலன் பாதிக்கப்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் திமுக, மக்களவையில் எத்தகைய நிலையை எடுக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனாலும், அது காங்கிரஸ் கூட்டணியில் மிக நம்பிக்கைக்கு உரிய கட்சி என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
மேலும், அன்னிய முதலீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.