ஆர்.பி.சிங்கின் குற்றச்சாட்டுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை : பாஜக குற்றச்சாட்டு

         நாடாளுமன்ற கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது, மத்திய கணக்கு தணிக்கை துறையின் முன்னாள் அதிகாரி ஆர்.பி.சிங் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்.பி.சிங், தற்போது கூறும் குற்றச்சாட்டை, முன்னரே தெரிவிக்காதது ஏன் என்றும் அக்கட்சியின் மூத்தத் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். பணியில் இருந்து ஓயவு பெற்ற பின், இதுபோன்ற குறறச்சாட்டுக்களை எழுப்புவது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவருக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆர்.பி.சிங் போன்ற நபர்களை தூண்டிவிட்டு, தங்கள் மீதான ஊழல் கறையை போக்கிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் குறறம் சாட்டியுள்ளார்.