தே.மு.தி.க., எம்.எல்.ஏ. ஜாமின் மனு தள்ளுபடி

                   கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மேட்டூர் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் ஜாமின் மனுவை ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 தள்ளுபடி செய்தது.
கடந்த திங்கள் கிழமையன்று மின்வெட்டை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆத்தூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்,தேமுதிகவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக அதிமுகவினர் புகார் அளித்தனர். மேலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் தே.மு.தி.க., கூட்டம் நடத்தியதால் போலீசார் கூட்டத்தை நிறுத்த முயன்றனர்.
அப்போது தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பார்த்திபன் போலீசாரை தடுத்து தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பார்த்திபன் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பார்த்திபன் ஜாமீன் கோரி ஆத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவராஜ், எம்.எல்.ஏ., பார்த்திபனுக்கு ஜாமீன் வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
  -வளசை விவேக்