பா.ஜ.க.உயர்மட்டக்குழு கூட்டம் – கட்கரிக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

     தலைவர் பதவியிலிருந்து நிதின் கட்கரி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சிக்குள் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில், அது தொடர்பாக விவாதிக்க அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி புறக்கணித்தார். இந்த கூட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பாஜக தலைவர் கட்கரியும் பங்கேற்கவில்லை.
பாஜக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிதின் கட்கரிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவரான அத்வானி இந்த கூட்டத்தை புறக்கணித்ததால் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.
நிதின் கட்கரி மீதான ஊழல் புகாரையடுத்து கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. நிதின் கட்கரி பதவி விலகக் கோரி, பிரபல வழக்கறிஞரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி கட்கரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது செயற்குழு உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக முன்னணித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், கட்கரிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
-சத்திஷ் K .K.K.nagar