மின்தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை

     மின்தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதை விட, மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண முயல்வதே சிறந்த வழிமுறையாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மாநில அரசு திரும்ப ஒப்படைத்த மின்சாரத்தை, தமிழத்துக்குத் தர மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், மின்வழித் தடம் இல்லாததால், உடனடியாக அதனைச் செயல்படுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.
ராய்ப்பூர் வழியாக அமைக்கப்பட்டு வரும் புதிய மின்வழித்தடப் பணிகள் வரும் 2014ம் ஆண்டுதான் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்திருப்பதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அருகில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை மத்திய அரசிடமிருந்து கூடுதலாகப் பெற முயல்வதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனவும் கருணாநிதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.