மாற்றுத்திறனாளிகள் வாரியத்தை செயல்படுத்த வைகோ வேண்டுகோள்

           செயல்படாத மாற்றுத்திறனாளிகள் வாரியத்தை செயல்படும் அமைப்பாக விரைந்து மாற்ற வேண்டும் என்று தமிழக அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த திமுக ஆட்சியில், மாற்றுத் திறனாளிகள் வாரியம் செயல்படாத வாரியமாக இருந்ததாக குறை கூறியுள்ள வைகோ, அதிமுக ஆட்சியிலும் இது தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.காலம் கடத்தாமல் வாரியத்தை செயல்பட வைக்க வேண்டும், உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார். மாற்றுத் திறனாளிகளுள் அனுபவம் வாய்ந்தவர்களை வாரியத்தின் ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகள் பால் அக்கறை கொண்ட திறமையான அதிகாரிகளை கண்காணிப்புப் பணியில் அமர்த்தி அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தி உள்ளார்