குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி

       குஜராத்தில் தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
குஜராத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பெரும்பாலான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா 116 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை பாரதிய ஜனதாவிற்கு 117 இடங்கள் கிடைத்தன. தற்போது அதை விட மூன்று இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.
கடந்த முறை 59 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸிற்கு தற்போது இரண்டு இடங்கள் குறைவாக கிடைத்துள்ளன.
பாரதிய ஜனதாவில் இருந்து விலகி குஜராத் பரிவர்த்தன் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய கேசுபாய் பட்டேல் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அக்கட்சி இரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
பிற கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
மணி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட நரேந்திர மோதி, சுமார் 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரியின் மனைவி ஸ்வேதா பட் தோல்வியைத் தழுவினார்.
குஜராத், சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றி பெற்றதற்கு நிர்வாகத் திறமையுடன் கூடிய ஊழலற்ற ஆட்சியே காரணம் என்று அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது.