எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்தே முடிவுகளை அரசு எடுக்கும்- மன்மோகன் சிங்


        இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருவதை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்தே முடிவுகளை அரசு எடுக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
      இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோரிடம் பிரதமர் நேற்று தொலைபேசியில் பேசினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன், இன்று இருவரையும் சந்தித்து எல்லைப் பகுதி நிலவரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைப்பார் என்றும் பிரதமர் அப்போது உறுதி அளித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளுக்குத் தெரிவிக்காமல் எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுக்காது என பிரதமர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
       இந்திய வீரர்கள் இருவரை கொன்று ஒருவரின் தலையை எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங் கூறியுள்ள நிலையில், பிரதமர் இவ்வாறு தெரிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
   இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் காண்பதற்கு இந்தியா தொடர்ந்து முயலும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இரண்டு நாள் பூட்டான் சென்றுள்ள குர்ஷித் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
     இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே சக்கன் டாக் பாக் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது வலியுறுத்தப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ அதிகாரி லெப்டினட் ஜெனரல் ஓம் பிரகாஷ், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

                -இணைய செய்தியாளர் - s.குருஜி