காங்கிரசுக்கு காத்திருக்கிறது கடும் சவால்…


        ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது, ராகுல் காந்திக்கு முக்கிய பதவி அளிப்பது போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மாநாட்டில் தொடக்க உரையாற்றிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவால்கள் காத்திருப்பதாக தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதால், சுயபரிசோதனைக்கான நேரம் வந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் வெற்றியையும், தோல்வியையும் ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார்.
பெண்களுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறிய சோனியா காந்தி, சமூக நீதியும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்றார். இருப்பினும் ஆட்சி அதிகாரம் பெறுவது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் அல்ல, தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய திக்விஜய்சிங், ராஜீவ் சுக்லா, சஞ்சய் நிரூபம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற தேர்தலை ராகுல்காந்தி தலைமையில் எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், இளைஞரணி பிரதிநிதிகள் உள்பட 350க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. நடுத்தர மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், புதிய அறிவிப்புகளை நிதி நிலை அறிக்கையை அறிவித்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இம்மாநாட்டைத் தொடர்ந்து 20-ம்தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதோடு, மேலும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவது போன்ற வியூகங்களை வகுக்க குழு ஒன்று அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதார சீர் திருத்தத்தால் கூட்டணிக்கட்சிகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளது. வியாழக்கிழமை அன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் அதிகாரத்தை வழங்கி இருப்பதால், இது சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனால், இதுபோன்ற கடும் சவால்களை சந்தித்துவரும் காங்கிரஸ், தொடர்ந்து இதை சமாளிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
                             -இணைய செய்தியாளர் - s.குருஜி