பிரதமரை அடிக்கவா முடியும் மமதாவின் கருத்தால் சர்ச்சை


       அடிக்கடி அதிரடியான கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, இப்போது பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியிருக்கிறார்.
கேனிங் நகரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உர விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை 10 முறை சந்தித்து பேசியதாகவும், ஆனால், ஒரு பயனும் இதில் ஏற்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

    பிரதமரை சந்தித்து பேசியதற்கு மேல் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறிய மமதா, இதற்காக தான் பிரதமரை அடிக்கவா முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படிச் செய்தால், தன்னை பெண் குண்டர் என கூறி விடுவார்கள் என்று பேசிய மமதா பானர்ஜி, தான் ஒன்றும் செய்யாமலேயே தன்னை பெண் குண்டர் என்று பலரும் அழைப்பதாகவும் பேசியிருக்கிறார்.
   மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும் ஆதரித்திருந்தால், மத்திய அரசு கவிழ்ந்து இருக்கும் என்றும், அதன்மூலம் மக்களுக்கு விலைவாசி சுமை வந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
    இருப்பினும், வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திடீர் தேர்தல் வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் பற்றி மமதா பேசிய கருத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
                                   -இணைய செய்தியாளர் - s.குருஜி