திமுக ஒரு ஜனநாயக இயக்கம் கருணாநிதிக்கு அடுத்து அந்தப் பதவி யாருக்கு

               தமக்கடுத்து மு.க.ஸ்டாலின் தமது பணிகளை எடுத்துச் செல்வார் என, திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு, அவரது மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தனக்குப் பின் மு.க.ஸ்டாலின்தான் என்று கருணாநிதி கூறியுள்ளாரே என்று சென்னை விமான நிலையம் வந்திறங்கிய மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தி.மு.க. ஒன்றும் திறந்த மடம் இல்லை என்று கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வார்த்தைகளாலேயே மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அளித்துள்ள இந்தப் பதில், சகோதரர்களுக்கு இடையே நிலவும் பனிப்போரை உறுதிப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.
திமுக ஒரு ஜனநாயக இயக்கம் என்று அதன் தலைவர்களால் கூறப்பட்டாலும், கருணாநிதிக்கு அடுத்து அந்தப் பதவி யாருக்கு என்ற கேள்வி அடிக்கடி எழுந்து அடங்கிக்கொண்டிருக்கிறது.
திமுகவில் 1970களில், அவசர நிலைப் பிரகடனத்தின் பின்னெழுச்சியாக தனது அரசியல் பிரவேசத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். எண்பதுகளின் இறுதியில் இளைரணிப் பொறுப்பை ஏற்றார்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் மேயர் பதவியை ஏற்ற அவர் தொடர்ந்து அமைச்சர், துணை முதலமைச்சர் என ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சி படிப்படியாகவே நடந்தேறியது.
இடைப்பட்ட காலத்தில் மு.க.அழகிரியும் தமது முக்கியத்துவத்தை கட்சிக்குள் வளர்க்கத் தவறவில்லை. இதனிடையே தென் மாவட்டங்களில் திமுகவைப் பலப்படுத்தும் பணியில் களமிறக்கப்பட்ட அழகிரி, தலைமைப் பதவி மீது தமக்குள்ள கவனத்தையும் கைவிட்டு விடவில்லை.
இதனால் ஸ்டாலின், அழகிரி இடையே தலைமைப் பதவிக்கான பனிப்போர் நீறுபூத்த நெருப்பாக அவ்வப்போது பற்றியெறிவதும் அணைவதுமாகத் தொடர்ந்தது. இந்நிலையில், சென்னை நிகழ்ச்சி ஒன்றில் வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசிய கருணாநிதி கூறிய கருத்து, இதுதொடர்பான சர்ச்சையை மீண்டும் எழுப்பி உள்ளது.
தலைமைப் பதவியைப் போட்டியின்றி விட்டுக்கொடுக்கத் தாம் தயாராக இல்லை என்பதை காட்டமான பதில் மூலம் அழகிரி தெளிவுபடுத்தி உள்ளார். வாரிசுப் போட்டி வலுவடைந்து வரும் நிலையில், திமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் வலுவடையத் தொடங்கி உள்ளன.