இலங்கை ராணுவத்தின் கொடூர முகம் அரசியல் தலைவர்கள் கண்டனம்


  பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இலங்கை தொடர்பான அணுகுமுறையை இந்தியா இனியேனும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிழற்படங்கள், தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
  12 வயதுப் பாலகன் என்று கூடப் பாராமல் பாலச்சந்திரனைக் கொன்ற இலங்கை ராணுவத்தின் கொடூர முகம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
  இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவே போதுமான ஆதாரமாக உள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
  இலங்கை ராணுவம் கொடுமையான போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். இலங்கை தொடர்பான அணுகுமுறையை இந்தியா இனியேனும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
  இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் அப்போதும் இப்போதும் மௌனம் சாதிப்பது வேதனைக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
  இதனிடையே, ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை மாநாட்டில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான முடிவை எடுக்க இந்தியா தயங்காது என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உறுதி தெரிவித்துள்ளார்.
  சேனல் 4 தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள நிழற்படம், இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்பட வேண்டும் என்பதே தமிழக அரசியல் தலைவர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.