ஐ.நா மனித உரிமை அவையில் திரையிட இலங்கை அரசு எதிர்ப்புதமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பான ஆவணப்படத்தை ஐ.நா மனித உரிமை அவையில் திரையிட இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசிங்க, மனித உரிமை அவையின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படம், இலங்கை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
  மேலும் உறுதிபடுத்தப்படாத மற்றும் ஆதாரமற்ற தகவல்களை ஆவணப்படம் கொண்டிருப்பதாகவும் இலங்கை தூதர் ஆர்யசிங்க தெரிவித்துள்ளார். எனவே, ஐ.நா மனித உரிமை அவையில், இலங்கை ராணுவத்தினர் குறித்த சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர், அவ்வாறு திரையிட்டால் அது, விதிகளை மீறிய செயலாகும் என கூறியுள்ளார்.
   ஜெனிவாவில் தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமை அவையின் கூட்டத்தில், வரும் வெள்ளிக்கிழமையன்று சேனல்-4 தொலைக்காட்சியின் "No Fire Zone: The Killing Fields of Sri Lanka," என்ற ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது.
   இந்த ஆவணப்படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் இலங்கைத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் ஆகியோரை கொடூரமான முறையில் ராணுவத்தினர் கொலை செய்வது குறித்த காட்சிகள் அடங்கியுள்ளன.
  இதனிடையே அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் குறித்து, இந்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.