மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்


  ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வரவுள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன்உயிருடன்பிடிக்கப்பட்டு பின்னர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலையில், ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அது இன்று மாநிலங்களவையிலும் எதிரொலிக்க உள்ளது.
  இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரக் கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சார்பில் மைத்ரேயன், திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி. ராஜா உள்ளிட்ட எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் கடிதம் அளித்துள்ளனர். மேலும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, சிவசேனா கட்சியின் சஞ்சாய் ராட் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து, இதுதொடர்பாக இன்று மதியம் 12 மணியளவில் மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் நடைபெறும் என தெரிகிறது.
   இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் நிலைப்பாட்டுக்கு அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியான திமுகவும் எதிர்ப்பு தெரிவிப்பது மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தத்தை கொடுக்கும் என கருதப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று கடும் விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் இதுகுறித்து அவையில் விளக்கம் அளிக்க கோரிக்கை விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கை விவகாரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
   ஜெனிவாவில், கடந்த முறை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது போல், இம்முறையும் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருக்க, அந்நாட்டுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனிடையே, அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
   இலங்கையில் மனித குலத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும், இந்தியாவின் நடவடிக்கை என்ன என்பது மாநிலங்களவையில் நடைபெறும் இன்றைய விவாதத்தின் மூலம் ஓரளவு தெரிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.