எரிவாயுகுழாய்அமைப்பதில், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது         மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் சார்பில், எரிவாயு குழாய் அமைப்பதில், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தலைமைச் செயலாளரால் மார்ச் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில், கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
   அது குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, கெயில் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று, எவ்வித அச்சமும் இன்றி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
   விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு, அவர்கள் பாதிக்கப்படாத வகையில், தக்க முடிவினை தமிழக அரசு எடுக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.