இன்று தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்குள் கைகலப்பு ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்குள் கைகலப்பு சம்பவம் நடைபெற்றது.
  தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய திட்டக்குடி தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன், தமது தொகுதியில் நிறைவேற்றப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பட்டியலிட்டார்.
  தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் உறுப்பினர்கள், தனது வழியை பின்பற்ற வேண்டும் என்று பேசினார். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் வெகுவாக அவர் புகழ்ந்து பேசினார்.
தமிழழகன் பேச்சுக்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும், தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாகவும் மாறியது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவை முன்னவரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.
  இதனையடுத்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நடத்திய தாக்குதலில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. அனகை முருகேசனின் சட்டை கிழிக்கப்பட்டதாக சட்டப்பேரவைக்கு வெளியே தேமுதிக கொறடா சந்திரகுமார் புகார் கூறினார்.
  சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எல்.வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் மீதும், ஒளிப்பதிவு காட்சிகளை பார்த்து மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பான தகவல், அவையின் உரிமைக் குழுவுக்கு தெரிவிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.
                                           -இணைய செய்தியாளர் - s.குருஜி