கூட்டுக் குழு முன் பிரதமர் மன்மோகன்சிங் ஆஜராக வேண்டும்

        2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் பிரதமர் மன்மோகன்சிங் ஆஜராக வேண்டும் என குழுவின் உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.
    பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் ஆஜராக தயங்கினால், ஏதோ ஒன்றை மறைக்க முயல்வதாக ஆகிவிடும் என அந்த கடிதத்தில் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
    2 ஜி முறைகேடு புகார் தொடர்பாக பொதுக்கணக்குக் குழு முன் ஆஜராக பிரதமர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள சின்ஹா, இதேபோன்று கூட்டுக்குழு முன்பு ஆஜராக விருப்பம் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 
    2 ஜி ஊழல் தொடர்பாக பிரதமர் மீதும் அமைச்சர் சிதம்பரம் மீதும் ஆ.ராசா குற்றம் சுமத்தியிருப்பதை குறிப்பிட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, தவறு ஏதும் செய்யவில்லை என்றால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
   இதேபோன்று அமைச்சர் சிதம்பரத்தையும் நேரில் ஆஜராகுமாறு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என யஷ்வந்த் சின்ஹா கேட்டுக்கொண்டுள்ளார்.
    மேலும் ஆ.ராசாவை சாட்சியாக அழைத்து விசாரிக்க கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோவிற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு யஷ்வந்த் சின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.