மோதியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியில்எதிர்ப்பு


   ரேந்திர மோதியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த, பாரதிய ஜனதாவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் இரண்டு நாள் தேசியச் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
    முதல்நாள் கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தியாகி, கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பாரதிய ஜனதாவினர் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என தமது கட்சியினர் கூறியதாகத் தெரிவித்தார்.
   நரேந்திர மோதியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் கடும் எதிர்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். மதச்சார்பற்ற ஒருவரையே தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய ஜனதா தளம் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
   கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, முதலமைச்சர் என்ற முறையில் மோதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கருதுவதாகவும் தியாகி கூறினார். எனினும் இந்தப் பிரச்னைகள் குறித்த முடிவை எடுக்க பாரதிய ஜனதாவுக்கு உரிய அவகாசம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக சரத்யாதவ் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.