கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்றால், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்துள்ளது.கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
   இந்த நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் மூத்தத் தலைவர் அருண் ஜெட்லி இதனை வெளியிட, கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பெற்று கொண்டார்.
   பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில், கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பியூசி வகுப்பு முதல் கல்லூரி வரை அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்கப்படும் எனவும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இலவச இண்டர்நெட் வசதி அளிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   மாணவர்களுக்கு இலவச லேப்டாப், டேப்ளட் மின்னணு சாதனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிசையில்லாத மாநிலமாக கர்நாடகா மாற்றப்படும் என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் சோலார் மின்சக்தியில் இயங்கும் மோட்டார்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு சமவாய்ப்பு, அதாவது 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.