இலங்கையில் யுத்தம் ஏற்படலாம் அமெரிக்கா எச்சரிக்கை

       இலங்கைத் தமிழர்களின் தேவைகளை அறிந்து அந்நாட்டு அரசு செயல்படத் தவறினால், மீண்டும் ஒரு யுத்தத்தை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக, அனைத்து மட்டத்திலும் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
  இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற வெளிநாட்டு தூதர்களுக்கான கூட்டத்தில் பேசிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் மிசேல் சிசன், சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுடன் அவர்களுக்கு சம உரிமை வழங்குவதன் மூலமே, இலங்கையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.
  இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதனை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், மிசேல் சிசன் கூறினார்.
  சர்வதேச நடவடிக்கைகளுக்கு பணிந்து, தமிழர்கள் நலனுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்வதை விட, சொந்த நாட்டின் நலனையும், வளர்ச்சியையும் கருதி அந்த நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் மிசேல் சிசின் வலியுறுத்தினார்.
  கடந்த 2012ம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதில் பல சிக்கல்கள் இருப்பதால் அவற்றை நடைமுறைப்படுத்த காலதாமதம் ஆகும் என இலங்கை அரசு கூறினாலும், விரைவில் அவற்றை நிறைவேற்றத் தொடங்குவது அவசியம் எனக் கூறினார்.
  இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமையுடன், சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.