சுரங்க முறைகேடு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்


    நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சிபிஐ வரைவு அறிக்கை திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பிறரின் தலையீட்டில் இருந்து சிபிஐ அமைப்பை பாதுகாக்க ஜூலை 10ஆம் தேதிக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

   அரசு அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் வரைவு அறிக்கையின் இதயப் பகுதியாகக் கருதப்படும் சாராம்சங்கள் திருத்தப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
   மேலும், சிபிஐ அமைப்புக்கு பல எஜமானர்கள் இருப்பதாக கூறியுள்ள உச்சநீதிமன்றம், கூண்டில் அடைக்கப்பட்ட கிளிப்பிள்ளை போல் சிபிஐ., ஆகிவிட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன், வழக்கின் உண்மையை கண்டறிவது தான் சிபிஐ அமைப்பின் வேலை என்றும், அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்வது அதன் பணி அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
   மேலும், அந்த வரைவு அறிக்கையில் சிபிஐ அதிகாரிகளிடம் திருத்தங்களைக் கூறியதற்காக நிலக்கரித் துறைக்கும், பிரதமர் அலுவலக இணைச் செயலாளர்களுக்கும் இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
   நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. மேலும், அரசு மற்றும் அதிகாரிகளின் நெருக்கடிகளை எப்படி சமாளிப்பது என்று சிபிஐ அறிந்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
   நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த ரவிகாந்த் சாவ்லாவை மீண்டும் அப்பணியில் நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறரின் தலையீட்டில் இருந்து சிபிஐ அமைப்பை பாதுகாக்க, ஜூலை 10ஆம் தேதிக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   அதே நேரத்தில், சுரங்க முறைகேடு குறித்த சிபிஐ.,யின் வரைவு அறிக்கையை தாம் கேட்கவில்லை என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், சட்ட அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரிலேயே தாம், சிபிஐ அதிகாரிகளை சந்தித்துப் பேசியதாகவும் வாஹன்வதி கூறினார். இந்த நிலையில், எதிர்காலத்தில் இந்த விசாரணை நியாயமாக நடைபெறும் என்று சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரசாந்த் பூஷண், வழக்கறிஞர்
   இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இது முற்றிலும் சட்டவிரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலக அதிகாரிகள், நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் நிலவர அறிக்கையில் மாற்றங்கள் செய்ய முயற்சித்தது தவறாகும். எனவே, உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் இனி எதிர்காலத்தில் எந்த ஒரு விசாரணை நிலை அறிக்கையையும் அமைச்சர்களிடமோ, அரசின் அதிகாரிகளிடமோ அல்லது வழக்கறிஞர்களிடமோ காட்ட கூடாது என்று தெரிவித்துள்ளது என்றார்.