தெலங்கானா உருவான வரலாறு…

Telangana issue


      44 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இந்த அறிவிப்பை தெலங்கானா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தெலங்கானா விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் பிரதமர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு கூட்டத்திலும் ஆந்திராவைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் யோசனை ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கட்சிகள் வரவேற்பு
தனித் தெலங்கானா அறிவிப்புக்கு, பாரதிய ஜனதா, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
29வது மாநிலமாக தெலங்கானா....
நாட்டின் 29வது மாநிலமாக அமையவிருக்கும் தெலங்கானாவில் சுமார் மூன்றரை கோடி மக்கள் வசிப்பார்கள்.
அதிலாபாத், கரிம் நகர், கம்மம், மகபூப் நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் மற்றும் ஐதராபாத் ஆகிய 10 மாவட்டங்களையும், பொதுத் தலைநகரான ஐதராபாத்தையும் உள்ளடக்கியதாக தெலங்கானா மாநிலம் இருக்கும். ராயலசீமா பகுதியில் உள்ள 2 மாவட்டங்களை தெலங்கானாவுடன் இணைக்கும் யோசனை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், புதிய பகுதிகளையோ, மாவட்டங்களையோ சேர்ப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் 17 இடங்களையும், 294 சட்டமன்ற தொகுதிகளில் 119 இடங்களையும் உள்ளடக்கியதாக தெலங்கானா மாநிலம் அமைகிறது.
தெலங்கானா பகுதியின் வரலாறு

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஐதராபாத் நிசாம் மன்னரின் ஆட்சியின் கீழ் தெலங்கானா பகுதி இருந்தது. இந்தப் பகுதி 1948-ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது வெல்லோடி முதல் முதல்வராக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 1952 ஆம் ஆண்டு ஐதரபாத்தை தலைநகராகக் கொண்ட ஆந்திராவில் நடைபெற்ற முதல் தேர்தலில் ராம கிருஷ்ணராவ் முதல்வராக தேர்வானார். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த தெலங்கானா, ஆந்திராவுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1956-ஆம் ஆண்டு, நவம்பர் ஒன்றாம் தேதி ஹைதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா பகுதி, ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. கல்வி வேலைவாய்ப்பில் தெலங்கானா பகுதி மக்களுக்கு 3ல் ஒரு பங்கு ஒதுக்கீடு, தெலங்கானாவைச் சேர்ந்தவருக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி போன்ற முக்கிய நிபந்தனைகளுடன்தான் தெலுங்கானா இணைக்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த இதுவரை 9 ஆணையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தெலங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து, 1969-ம் ஆண்டு உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர், அது தெலங்கானா மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. கடந்த 2001-ம் ஆண்டு தெலுங்கு தேசக் கட்சியிலிருந்து வெளியேறிய சந்திர சேகரராவ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 2009 ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
இதன் காரணமாக, தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. அதன்படி 2010 ஆம் ஆண்டு தெலங்கானா குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, 2010 டிசம்பர் மாதம் தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. எனினும், இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு, தற்போது தனித் தெலுங்கானா கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது மத்திய அரசு.