சிறையில் அடைக்கப்பட்டார் லாலுபிரசாத் யாதவ்

thagavalthalam

        மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊழல் நடைபெற்றதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பினை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்நது.
    கடந்த 1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடை தீவனத்தில் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
    அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் இன்று குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை விபரங்கள் வரும் 3 ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்.
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கத்திற்கு எதிரான அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாத நிலையில் இந்த தீர்ப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வழக்கு விபரம்

பிகாரின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலம் இருந்தபோது, பைசா மாவட்ட கருவூலத்தில் இருந்து கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக பெறப்பட்ட 37 கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

அப்போது, மாநில முதலமைச்சராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு 1996 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு 135 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு காரணமாக 1997 ஆம் ஆண்டு பிகார் மாநில முதலமைச்சர் பதவியை இழந்தார் லாலு பிரசாத். இந்த வழக்கில் மொத்தம் 56 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதில் 7 பேர் வழக்கு விசாரணையின் போது இறந்தனர். இருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறினர்.

2000 ஆம் ஆண்டு பிகாரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டதையடுத்து முறைகேடு தொடர்பாக மொத்தம் இருந்த 61 வழக்குகளில் 54 வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.

43 வழக்குகளை சிபிஐ நீதிமன்றம் விசாரித்ததில், 5 வழக்குகளில் லாலு பிரசாத், ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என லாலு பிரசாத் மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டை ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில் இந்த வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.