கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க ஆட்சியின் அசைக்க முடியாத அதிகாரப்புள்ளியாக வலம் வந்த செங்கோட்டையன், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நேரடி குட்-புக்கில் இடம் பெற்றிருந்தவர் செங்கோட்டையன். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்லும் இடங்களில், முக்கிய பாயிண்டுகளில் செங்கோட்டையன் எந்த இடத்தில் நிற்கிறாரோ, அந்த இடத்தில்தான் ஜெயலலிதா பேசுவார். அந்தளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வந்தார். எம்.ஜி.ஆரால் வளர்த்துவிடப்பட்டவரான செங்கோட்டையன், ஜா. - ஜெ. அணிகளாக அ.தி.மு.க பிரிந்தபோது, ஜெ. அணியில் இருந்தார். ஒரு கட்டத்தில், முத்துச்சாமி மீதான ஜெயலலிதா அதிருப்தியில் இருக்க செங்கோட்டையனை அமைச்சர் ஆக்கினார்.
முதல்வரின் வெறிபிடித்த பக்தனாகவே இருந்தார் செங்கோட்டையன். 1991 -96ல் செங்கோட்டையன் கொடிதான் பறந்தது. ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரப் பயணத்தை வடிவமைக்க வேண்டும் என்றால், செங்கோட்டையன்தான் சரியான சாய்ஸ் ஆக இருந்தார். 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அவருக்குவேளாண்மைத் துறையை ஒதுக்கினார்.
2011 சட்டமன்றத் தேர்தலில், பணத்தைப் பெற்றுக்கொண்டு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுத்தார் என்றும், முதல்வர் பதவிக்கு அச்சாரம் போடுகிறார் என்றும் சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வரிசைகட்டின. அவை தொடர்பாக, அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினார் ஜெயலலிதா.
அப்போது, சசிகலா பற்றித் தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் ஜெயலலிதாவிடம் போட்டுடைத்தார், செங்கோட்டையன். அமைச்சரவையில் மற்றவர்களைவிட செங்கோட்டையனை அதிகம் நம்பும் ஜெயலலிதா, கார்டனைவிட்டு சசிகலாவை வெளியில் அனுப்பினார். அது முதலே, சசிகலாவுக்கும் செங்கோட்டையனுக்கும் மோதல் தொடங்கியது.
கடந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே குடும்பத்தால் பிரச்னை ஏற்பட்டது. போயஸ்கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா மீண்டும் திரும்பி வந்துவிட்டார். அதையடுத்து, விசாரணையே இல்லாமல் செங்கோட்டையனிடம் இருந்த அத்தனைப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. இருப்பினும், கட்சி நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை அவர் தவிர்க்கவில்லை.
2016 சட்டசபைத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. வெற்றி பெற்றார் செங்கோட்டையன். 96ம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக எந்தப் பதவியிலும் அவர் இல்லை. இந்தமுறை வேட்பாளராக அறிவித்தபோது, 'செலவுக்கு என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தார். பாரம்பரிய சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் வீடு, நிலங்களாக உள்ளன. செலவு செய்வதற்கு பணமாக எதுவும் இல்லை.
சட்டசபைத் தேர்தலின் போது அனைவரிடமும் பத்து லட்சம், இருபது லட்சம் என கடன் வாங்கித்தான் செலவு செய்தாராம். சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. அரசியலில் இருந்தால் தொகுதியின் தேவைகளையாவது பூர்த்தி செய்யவேண்டும். ஆனால், இவர் கேட்டு எந்த அமைச்சரும் கண்டுகொள்ளப்போவதில்லை. எனவே, அரசியலே வேண்டாம் என்று செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளாரம்.
ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில், 'செங்கோட்டையன் வருகிறார்' என்றாலே கொங்கு மண்டல கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அலறல் இருக்கும். அந்தளவுக்கு பவர் பாலிடிக்ஸால் கோலோச்சிக் கொண்டிருந்தவர், இப்போது முதல்வரின் கண்பார்வைக்காக காத்துக் கிடக்கிறார் என்கின்றனர்.
எட்டு முறை எம்.எல்.ஏ., ஐந்து முறை அமைச்சர் என இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்தில் அதிகத் தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவின் அரசியல் அதிரடிகளைச் சமாளிக்க செங்கோட்டையன் போன்றவர்கள் தேவை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர், ஆனால் ஜெயலலிதாவின் பார்வை செங்கோட்டையன் பக்கம் திரும்புமா ?