குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற 
தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 13 மற்றும் 17 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 
தேர்தல் களத்தில் இறங்கியுள்ள அரசியல் கட்சிகள் இம்முறை இளைஞர்களின் 
வாக்குகளை பெற முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இளைஞர்களை 
ஈர்க்கும் வகையிலும், அவர்களிடம் தங்கள் கட்சியின் கொள்கைகளை பரப்பவும் 
சமூக வலைதளங்களை ஊடகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளன குஜராத் அரசியல் 
கட்சிகள்.
இளைஞர்களை ஈர்க்க ஃபேஸ்புக் : தங்களது  கொள்கைகளையும் 
வாக்குறுதிகளையும் சமூக வலைதளங்கள் வழியாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் 
கொண்டு சேர்த்து விடலாம் என்று நம்பிக்கையோடு இணையதள பிரச்சாரத்தை 
தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள் தேர்தல் வேட்பாளர்கள். இதன் ஒரு பகுதியாக 
வேட்பாளர்கள் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில்  தனி பக்கங்களை உருவாக்கி , 
அவர்கள் பற்றிய முழு தகவல்களையும் பதிவேற்றி உள்ளனர்.  கட்சியின் சாதனைகளை 
பதிவேற்றம் செய்வதுடன், இளைஞர்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்ள சமூக 
வலைதளங்கள் ஒரு ஊடகமாக செயல்படுகின்றன என்கின்றனர் அரசியல் கட்சியினர்.
மாறும் காலம் மாறிவரும் வேட்பாளர்கள் : வழக்கமான மேடை 
பேச்சுகள், மாபெரும் கூட்டங்கள் கூட்டி பிரம்மாண்டம் காட்டுவது, 
வாக்குறுதிகளை மேடையில் வாரி வீசுவது, வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு என 
காலம் காலமாக இருந்து வரும் தேர்தல் பாணியை குஜராத் தேர்தல் களம் கொஞ்சம் 
மாற்றிப் பார்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இப்போதைய அரசியல் கட்சியினர் 
நவீன தொழில்நுட்பத்தில் எந்த அளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை இளைய 
தலைமுறை அறிந்து கொள்ளவும் இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக மாறியிருக்கிறது.
                                                                                           
 
  -இணைய செய்தியாளர் - s.குருஜி 
               
 
