எடியூரப்பாவின் புதிய கட்சியான கர்நாடக ஜனதா கட்சி, இன்று 
அதிகாரபூர்வமாக தொடங்கப்படுகிறது. இதற்காக ஹாவேரியில் இன்று அக்கட்சியின் 
மாநாடு நடைபெறுகிறது. 
சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் மாநாட்டில் ஏற்பாடுகள் 
செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள கர்நாடக 
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க எடியூரப்பா வியூகம் வகுத்து 
வருகிறார். 
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாஜகவில் உள்ள எடியூரப்பாவின் 
ஆதரவாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதைத் தடுக்கும் வகையிலும், கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் 
வகையிலும்,  எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக கூட்டுறவுத் துறை 
அமைச்சர் புட்டசாமி, எம்.பி.பசவராஜ் ஆகியோரை பா.ஜ.க. மேலிடம் கட்சியில் 
இருந்து இடை நீக்கம் செய்துள்ளது. 
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க இயலாத அமைச்சர்கள் மற்றும் 
எம்.எல்.ஏ.க்களுக்கு சிற்றுண்டி சந்திப்புக்கும் எடியூரப்பா ஏற்பாடு 
செய்துள்ளார். இதில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு 
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது.
