காங்கிரசுக்கு எடியூரப்பா ஆதரவு ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்  கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் கட்சியின் பிடியில் சிக்கியிருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
  குல்பர்காவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஜெகதீஷ் ஷெட்டர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரும் 7ஆம் தேதி கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சி போட்டியிடாத பகுதிகளில் காங்கிரசுக்கு எடியூரப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.
  மேலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றும் படியும் எடியூரப்பா தனது கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். சுரங்க ஊழல் வழக்கை கருத்தில் கொண்டும், சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கவும் எடியூரப்பா காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பதாக ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
  கர்நாடக ஜனதா கட்சி வேட்பாளர்கள் தோற்றாலும் எடியூரப்பாவுக்கு கவலை இல்லை என்று கூறியுள்ள அவர், உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைய வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனமுடன் செயல்படுவதாக ஷெட்டர் விமர்சித்தார்.