இலங்கைத் தமிழர்களை கொழும்புவுக்கு திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்த வைகோ கோரிக்கை


     துபையில் உள்ள 19 இலங்கைத் தமிழர்களை கொழும்புவுக்கு திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
  இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு திருப்பி அனுப்பினால், அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
  இந்த 19 பேரில் ஒருவரான இளம்பெண் ஹரிணி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் என்பதையும் வைகோ குறிப்பிட்டுள்ளார். ஹரிணியை இலங்கைக்கு அனுப்பினால், அதே தொலைக்காட்சியில் பணியாற்றிய இசைப் பிரியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இவருக்கும் ஏற்படலாம் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
  எனவே. இவர்கள் 19 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
  இதுதொடர்பாக, வெளிவிவாகரத்துறையின் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் ஆகியோரையும் வைகோ நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
  கடந்த ஆண்டு தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கை தமிழர்கள் 45 பேர் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தபோது மரக்கலம் பழுதானது.ஆபத்தில் சிக்கித் தவித்த அவர்களை, துபையைச் சேர்ந்த மாலுமிகள் மீட்டனர். இவர்களில் 19 பேரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதாக துபை அரசு அறிவித்துள்ளது.