மதவாத சக்திகளுக்கு எதிராக டெல்லியில் கூட்டம்-- காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத மாற்று அணி

  
பசுமைநாயகன் Pasumainayagan www.thagavalthalam.com

   மதவாத சக்திகளுக்கு எதிரான இடதுசாரிகள் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம் உட்பட 17 மாநில கட்சிகள் பங்கேற்றன.

         காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத மாற்று அணி அமைப்பது குறித்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த கூட்டம் 3வது அணி அல்லது மாற்று அணி அமைப்பது குறித்து நடத்தப்படவில்லை என்றும், மதசார்பற்ற சக்திகளுக்கு எதிரான கருத்தரங்கமாகவே இதை கருத வேண்டும் என்றும், கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்தார்.

     இந்தக் கூட்டத்தில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சி பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். மதவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரளுமாறு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

      கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், மதவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக தெரிவித்தார். இடதுசாரிகள் 3-வது அணி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை என்றும், அரசியல் மற்றும் தேர்தலை மட்டும் நிர்ணயித்தும் செயல்படவில்லை என்றும் தற்போது மதவாதிகள் நாட்டை அச்சுறுத்தி வருவதால், அவர்களை தனிமைப்படுத்துவதே தங்களது தற்போதைய நோக்கம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

       இதனிடையே தேசிய அளவில் தற்போதைய நிலையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என்று பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.