அன்னிய முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி எதிர்கட்சிகள் மெகா திட்டம்

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கிய பிரச்சனையை கையில் எடுக்க, பாரதிய ஜனதா, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில், தங்களது நிலைப்பாடு குறித்து திமுக., திட்டவட்டமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
வணிகர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தே வெளியேறியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது.
அப்போது, இதுகுறித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுபற்றி வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன.
முக்கிய எதிர்கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் மட்டுமின்றி, பிஜூ ஜனதா தளம், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் அன்னிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் தங்களது முடிவை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எடுக்கவுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. மேலும், வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக தனது முடிவை அறிவிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், நாட்டின் நலன் கருதியே அந்நிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை முறியடிக்க காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இதற்கான தனது கூட்டணிக் கட்சிகள் மற்றும் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் கட்சிகளை திரட்டி வருகிறது. அதனால், அடுத்தவாரம் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.