பா.ஜ.க இன்று நாடு முழுவதும் போராட்டம்

        காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இருநாடுகளும் இந்த விவகாரம் குறித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவும், ஐ.நா. சபைவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனிடையே, ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் அவ்வப்போது எல்லைப் பகுதியில் நிகழ்ந்து வருவதும், இந்தியத் தரப்பில் அதற்கு பதிலடி தருவதும் பல ஆண்டுகளாக எந்தவித முற்றுப்புள்ளியும் இல்லாமல் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி காஷ்மீரில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், ஹேமராஜ் மற்றும் சுதாகர் சிங் என்னும் இரு வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியர்கள் எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறார்கள் என்பதைக் உணர்த்தவே தங்கள் கட்சி இன்று போராட்டம் நடத்துவதாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
காட்டுமிராண்டித்தனமாக, இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றதைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. மக்களின் கோபத்தை தெரியப்படுத்த மாவட்ட அளவில் பாஜக இந்த போராட்டத்தை நடத்துகிறது.
ஆனால், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பிரச்னைகளில் பாகிஸ்தான், சரியான நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசும், மக்களும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளோம். இந்தியாவுடன் நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம்.கடந்த 4 ஆண்டுகளாக வர்த்தக உறவை மேம்படுத்துதல், விசா நடைமுறையை தளர்த்துதல் போன்ற நம்பிக்கையூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டோம் எனவும் கூறினார்.
இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. மேலும், பாகிஸ்தான் படையினரால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் அந்நாட்டு தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களின்போது வழக்கம்போல், இந்தியா கண்டனக் குரல்களை எழுப்புவதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய முறையில் பதிலடி தரவேண்டும், என பெரும்பாலானோர் கருதுகின்றனர்.