ராகுல் தீவிர அரசியலில் இளைஞர் காங்கிரஸ் என்ன சாதித்தது?


     ராகுல் தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கியதில் இருந்து, அவர் மீதான எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்து வந்த போதிலும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வருகிறது. மேலும், கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தந்தனவா என்பதும் கேள்விக்குறியே.
அரசியலில் ராகுல்காந்தி ஈடுபடத் துவங்கிய சமயத்தில், மிகவும் ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரது குடிசைகளில் தங்கி, சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அனைவரும் இதை தீவிரமாக கவனிக்கத் துவங்கிய நிலையில், பின்னர் அதை பெரிய அளவில் ராகுல் தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டார் என்ற விமர்சனமும் உள்ளது.
அதேபோல, கட்சியில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்துவதற்காக முறையான உள்கட்சித் தேர்தலை கொண்டு வந்தார். இளைஞர்களுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் அறிவித்ததால், போட்டி போட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், உள்ளூர் கோஷ்டிகளின் பலத்தின் அடிப்படையில் தான், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனரே தவிர, கட்சியின் வளர்ச்சி இதில் வெளிப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது
இதுதவிர, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, ராகுலின் பிடிவாதம் காரணமாக, இளைஞர் காங்கிரசாருக்கு என குறிப்பிட்ட அளவு தொகுதிகள் வலியுறுத்தி பெறப்பட்டன. அவ்வாறு பெற்ற இடங்களில், போட்டியிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் எவரும் வெற்றி பெறவில்லை.
மேலும், மாநிலங்களுக்கு இடையே தற்போது நிலவி வரும் தண்ணீர் பங்கீடு பிரச்னைக்கு, நதிகளை இணைப்பதே சரியான தீர்வு என பெரும்பாலானோர் கருதியும், பேசியும் வந்த நிலையில், நதிநீர் இணைப்பு என்பது சாத்தியமானதல்ல என்றும், அதை நிறைவேற்றக் கூடாது என்றும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். ஆனால், அதற்கு மாற்று திட்டம் என்ன என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.
அதேநேரத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாக பேசி வந்தார். மேலும், ராகுல் காந்தி சிறந்த பேச்சாளராக வலம் வரவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பை கூட தவிர்ப்பவர் என்ற புகாரும் உண்டு.
                                         -பசுமை நாயகன்