தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களே ஊழல்வாதிகள் ஆஷிஸ்நந்தி கருத்தால் சர்ச்சை


        தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரே நாட்டில் ஊழல் அதிகரிக்கக் காரணம் என அரசியல் விமர்சகர் ஆஷிஸ் நந்தி கூறியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
   ஜெய்ப்பூரில் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இலக்கிய விழாவில், குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அரசியல் விமர்சகர் ஆஷிஷ் நந்தி, ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்ட வகுப்பினரே நாட்டில் ஊழல் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றனர் என்றார்.
  ஒரு குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து பேசிய அஷிஷ் நந்தியின் கருத்துக்கு, விவாதத்தில் பங்கேற்ற பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், இலக்கிய விழாவை முன்னின்று நடத்தும் சஞ்சய் ராய், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, அஷிஷ் நந்தியின் கருத்து தனிப்பட்டது என்று விளக்கமளித்திருக்கிறார். கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டு வரும் இலக்கிய விழாவுக்கு, தொடக்கத்தில் குறைவான எழுத்தாளர்கள் மட்டுமே வந்தனர். ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே நாட்டின் முக்கிய இலக்கிய விழாவாக இது பிரபலமடைந்துள்ளது. தற்போது தெற்காசியாவின் முக்கிய இலக்கிய விழாக்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.

  இதனிடையே, எழுத்தாளர் அஷிஸ் நந்தி கூறிய இந்தக் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக அஷிஸ் நந்தி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரதாப் ரூடி வலியுறுத்தி உள்ளார்.
  இதனிடையே, பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அஷிஷ் நந்தி தாம் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். எனினும் தாம் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர முடியாது எனத் தெரிவித்துள்ளார்..
                                           -இணைய செய்தியாளர் - s.குருஜி