நரேந்திர மோதிக்கு எதிர்ப்பு டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


  குஜராத் முதல்வர் நரேந்திர மோதி தலைநகர் டெல்லியில் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  குஜராத் முதல்வராக 4 வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், டெல்லி வந்த மோதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். பின்னர் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காக வந்திருந்தார்.
  அவரது வருகையை எதிர்க்கும் வகையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  மோதியின் வருகைக்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்களில் ஒரு பிரிவினர் அவரை வரவேற்கும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.