உதயமாகிறது தெலங்கானா மாநிலம்

     ஆந்திராவைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஒப்புதல் அளித்துள்ளன.
   டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தெலங்கானா பிரச்னை குறித்து விவாதித்தனர். அப்போது தெலங்கானா மாநிலத்தை அமைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
   இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய லோக் தள தலைவர் அஜித் சிங், தெலங்கானா மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.
   இதையடுத்து கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில், தெலங்கானா மாநிலத்தில் இடம்பெறும் மாவட்டங்கள், தலைநகர் குறித்த பிரச்னை உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா பகுதியின் வரலாறு
   ஆந்திராவின் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 10 மாவட்டங்களை கொண்டது தெலங்கானா. ஐதராபாத் நிசாமின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தப் பகுதி 1948-ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டில் ஹைதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா, ஆந்திராவுடன் சேர்ந்தது.
   கிருஷ்ணா, கோதாவரி ஆகிய முக்கிய ஆறுகளைக் கொண்ட தெலங்கானா, விவசாய வளம் கொழிக்கும் பகுதியாகவும் திகழ்கிறது. முதன்முறையாக 1969-ம் ஆண்டு தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் தீவிரமடைந்தது.
   ஆந்திராவின் தலைநகராக ஹைதராபாத் உள்ளதால், ஆந்திர மக்கள், ஆரம்பத்தில் இருந்தே, தனித் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2001-ம் ஆண்டில் தெலுங்கு தேசக் கட்சியிலிருந்து வெளியேறி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தொடங்கிய சந்திர சேகர் ராவ், தனித் தெலங்கானா போராட்டத்தைக் கையில் எடுத்தார்.
    2009-ல் தனித் தெலங்கானா கோரி ஒட்டுமொத்த தெலங்கானா மக்களும் ஒன்றிணைந்தனர். இதையடுத்து மத்திய அரசு தனி மாநிலம் அமைக்க கோரி, சந்திரசேகர ராவ், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதாக, மத்திய அரசு உறுதி அளித்தது.